
அரிசி, கோதுமை, கேழ்வரகு உணவு
சரியாய் உண்டால் உடல்நலம் கூடும்;
இட்டிலி, தோசை உளுந்தின் திறனால்
கெட்டியாய் எலும்பை வைத்திட உதவும்!
உண்ணும் போதினில் இடையிடையே நீர்
உண்ணும் பழக்கம் தவிர்த்திட வேண்டும்!
காய்கறி பழங்கள் கணிசமாய் உண்டால்
நோய் அணுகாது உடல்சீர் அடையும்!
பச்சைக் கீரை நெல்லிக்காயை
இச்சையாய் உண்டால் இளமை துள்ளிடும்!
வல்லாரைக்கீரை வெண்டைக்காய்
துல்லியமாய் நினைவாற்றல் வளர்த்திடும்
வேப்பம்பூவும் பாகற்காயும்
சாப்பிட வயிற்றில் கிருமிகள் தங்கா!
வாழைப் பழத்தால் சீரணம் எளிதாம்
ஏழைகள் இதனை என்றும் உண்பர்;
சிறுநீர்க் கற்கள் சேரா வண்ணம்
சிறிய வாழைத் தண்டுகள் காத்திடும்!
பித்தம் போக்கிடும் இஞ்சியும் சுக்கும்
மெத்தப் பசியை எழுப்பிட உதவும்!
கொத்த மல்லி பனங்கருப்பட்டியை
சுத்தமாகக் காய்ச்சிக் குடித்தால்
ஒத்தைத் தலைவலி பறந்து போய்விடும்!
இயற்கைத் தேனோ மருந்தாம்! உணவாம்!
இயற்கை உணவே என்றும் நல்லது!
சைவ உணவே சாலச் சிறந்தது
அசைவம் தவிர்த்தால் ஆயுள் நீளும்
வள்ளுவர் கூறும் கொல்லாமையினைத்
தள்ளிட வேண்டா; தகவாய் நடப்பீர்!
பசித்தபின் புசிக்கப் பழகிட வேண்டும்
பசித்திடும் வயிறு ருசி அறியாது!
பயறுகள் கிழங்குகள் அளவாய் உண்டால்
வயிறும் நலமாம் வாய்வும் குறையும்!
உறைகொள் புதுத்தயிர் எலும்பையும் காக்கும்
இரவினில் வேண்டாம் கீரையும் தயிரும்!
மிளகு, பூண்டு, பருப்பு ரசம் சுவை
அளவுடன் பருகலாம் அதுவே தனிச்சுவை!
எண்ணையில் பொரித்தவை தின்னச்சுவைதரும்
கண்ணியமாகச் சிறிதே உண்பீர்!
ஆவியில் வெந்த உணவே நல்லது
நோவை எளிதில் அண்ட விடாது!
பலநாள் குளிர்பதப் பெட்டியுள் உணவு
நலமாய் இராது; மிகுந்திடும் கெடுதி!
'சுத்தம் சோறு போடும்' என்பர்
சுத்தமாய் நகங்களை வைத்திட வேண்டும்
புளிப்பும் உப்பும் இனிப்பும் உரப்பும்
அளவாய் உண்டால் உடல்நலம் பெருகும்!
மிளகுத் தூளும் எலுமிச்சையும்
எளிதாய் உரப்பு புளிப்புக்கு உதவும்!
'நொறுங்கத் தின்றால் நூறு வயது'
விரைந்தே உண்டால் உடல்நலக் கேடு!
வயிற்றை மூன்று பகுதியாய்ப் பிரித்து
வயிற்றுக்கு உணவை வழங்கிட வேண்டும்
ஒருபங்கு உணவும் ஒருவாய் நீரும்
ஒருபுறம் வாய்வுக்கு ஒதுக்கிட வேண்டும்!
வேளா வேளைக்கு உண்ணா விட்டால்
கோளாறாகும் குடல்புண் வந்திடும்
வாரம் ஒருநாள் வயிற்றுக்கு ஓய்வுஎனில்
சீராய் உடல்நலம் செம்மை பெற்றிடும்!
உணவே மருந்தாம் உணர்ந்தே உண்டால்
துணையென எந்த மருந்தும் வேண்டா!
வெற்றிலை பாக்கு ஓரிரண்டெடுத்து
சற்றே மென்றால் செரித்திட உதவும்
வாய்க்குள் புகையிலைக் கவளம் ஒதுக்கினால்
நோய்க்கு இடமாகும் புற்றுநோய் முளைக்கும்
வெற்றிலைக் காவி பற்களைக் கெடுக்கும்
வெற்றிலை எச்சில் சுற்றிலும் கெடுத்திடும்!
காய்ச்சி நன்கு வடிகட்டிய நீர்
நோய்க் கிருமிகள் இல்லாக் குடிநீர்
குடல்
குடிநீர் அசுத்தமாக இருந்திடில்
கொடிய வாந்தி பேதிநோய் வந்திடும்!
அதிகாலையிலே ஐந்து குவளை
மெதுவாய்த் தண்ணீர் குடித்தால் உடலின்
கழிவுப் பொருள்கள் வெளியேறிடவே
எளிதாய் அமையும் இன்றே செய்வீர்!
குடலும் வயிறும் சுத்தமாய் இருந்தால்
உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளும்!
காலையும் மாலையும் கடன் கழிக்காவிழல்
சூலமாய்க் குத்திடும் மலச்சிக்கல் வலி
மூலநோயும் குடல் இறக்கமும் நமை
வேலை செய்ய விடாமல் அழுத்தும்!
நீரைச் சுருக்கி நெய்யை உருக்கி
மோரைப் பெருக்கி உண்பவர் தமது
பேரைச் சொன்னால் பறந்திடும் நோய்கள்!
மது விலக்கு
'மது'எனும் அரக்கன் மதியினைக் கெடுப்பான்
மதுவை ஒழித்தால் குடும்பம் மகிழ்வுறும்
மதுவைக் குடித்தே குடல் புண்ணாகி
விதியெனச் செத்தவர் கணக்கில் அடங்கார்
குடியது மிகவும் கொடியது, நல்ல
குடியைக் குடியே கெடுத்திடும் நாட்டில்!
கள்ளச் சாராயத்தை குடித்தோர்
கொள்ளியால் தலையைத் தேய்த்தது போன்று
பார்வை இழந்து நாத்தடுமாறி
கோரமாக மரணம் தழுவினார்!
போதை மருந்தும் போதை ஊசியும்
பாதை மாற்றிடும் பயங்கரப் பேய்களாம்!
எலும்புகள்
நோய் எதுவாயினும் கலங்கிட வேண்டா
நீயே மருந்தைக் கலக்கிட வேண்டா
மருத்துவர் சொல்லா மருந்துகள் உண்பது
வருத்தமாய்ப் பக்க விளைவுகள் அளித்திடும்!
எலும்பு முறிவுஎனில் ஏற்ற சிகிச்சை
நலமாய்ச் செய்தே நலம்பெற வேண்டும்;
நாட்டு மருந்துகள் பச்சிலைக் கட்டுகள்
மூட்டைப் பொருத்த முற்றிலும் உதவா!
உடல்
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம்
தவறிலாப் பழக்க வழக்கம் வேண்டும்
நல்ல உள்ளம் நல்ல உடலில்
வல்லமையுடனே இருந்திடும் என்பர்;
'உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேன்' என
திறம்பட உரைக்கும் திருமந்திரமும்!
உடல்வலுவு அடையப் பயிற்சிகள் வேண்டும்
திடகாத்திரமாய்த் தெரிந்திட தினமும்
உடற்பயிற்சியினை விடாது செய்வீர்!
நடைப் பழக்கமும் ஓர் நல்ல பயிற்சி!
தற்காப்புக் கலை தெரிந்திடல் நலமே
மற்போர் சிலம்பம் போற்றிட வேண்டும்!
நீந்தத் தெரிதல் பிறர்க்கும் உதவும்
நீந்தினால் உடலும் வலுவாய் மாறிடும்!
உதவியில் சிறந்தது முதல் உதவியாகும்
முதல் உதவியினால் உயிரைக் காக்கலாம்
மனத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி
தினமும் தியானம் செய்து வந்தால்
உள்ளமும் உடலும் உற்சாகம் பெறும்!
பருத்திநூல் ஆடைகள் விருப்புடன் உடுத்துக
கோடை குளிர்ச்சி இரு பருவத்திலும்
சோடை போகாது சுகமாய் உழைக்கும்!
நொறுக்குத் தீனியும் நொடிக் கொரு 'காப்பி'யும்
பெருத்திடச் செய்யும் எவரது உடலையும்!
பருத்த தொந்தி பார்ப்பதற்கு அழகா?
சிறுத்த கொடியிடைப் பெண்விரும்பிடுமா?
இதய நோய்கள் மூட்டு வலிகள்
பொதபொத உடம்பில் புகுந்து ஆட்டமிடும்
சர்க்கரையுடனே உடல் எடை குறைப்பீர்!
சித்திரம் வரைதல் கைக்கும் பழக்கம்
சுத்தமாய் செந்தமிழ் நாவின் பழக்கம்
உரக்கப் படித்தால் உச்சரிப்பு உயரும்
உரக்கவே மேடையில் பேசவும் முடியும்!
சிரிப்பும் சிறந்த மருந்தே ஆகும்
சிரிக்கும்படி நாம் வாழ்ந்திடல் தவறு!
உழைத்தப்பின் உண்பது உடலுடன் ஒட்டும்!
உழைப்புக்கு ஏற்ற உறக்கம் வேண்டும்
பகலில் உறங்கினால் பருத்திடும் உடம்பு
சுகமாய் உறங்கிட இரவே சரியாம்!
வடக்கே தலையை வைத்துப் படுத்தால்
இடக்குப் பண்ணிடும் காந்தப் புலன்கள்.
உடையும் படுக்கையும் மனமும் தூய்மை
நொடிப்பொழுதினிலே தாலாட்டிசைக்கும்
இரவில் பத்து மணிக்குப்படுத்து,
வைகறையில் ஐந்து மணிவரை உறங்குக
சூரியன் உதிக்குமுன் எழுந்து குளிப்பது
சீரிய பழக்கம் சிந்தனை வளம்பெறும்
காலையில் படித்தால் மனதில் பதியும்
காலையில் பாடினால் குரல் வளம் பெறுமாம்!
0 comments:
Post a Comment