Tuesday, July 21, 2009

Crowd Sourcing

"தேவையான அனைத்துத் தகவல்களையும்கொண்டு இருக்கும் இன்றைய இணைய உலகில், எதிர் காலத்துக்காக, நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்களுக்காக வாழ முயல வேண்டும். இதற்கு முதற்படி, கம்ப்யூட்டரையும் செல்போனையும் கொஞ்சம் அணைத்துவிட்டு, உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்ப்பது!"

'பென்' எனச் செல்லமாக அழைக்கப்படும் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா வில் கூகுள் CEO எரிக் ஸ்மித் சென்ற மாதம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. அவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது.

இன்டர்நெட் இணைக்கப்பட்ட மடிக்கணினியும் அலைபேசியும் இருந்துவிட்டால், எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்பது நாளுக்கு நாள் நிஜமாகிக்கொண்டே வருகிறது. பார்ட்னருடன் படுக்கைக் குச் செல்லாமல், மடிக்கணினியைத் தட்டியபடியே தூங்கிவிடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்கிறது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று. இது தம்பதியரிடையே கொண்டுவரும் பிரச்னை ('கம்ப்யூட் டர்தான் உங்களுக்கு முதல் பொண் டாட்டி. இதை ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே வீசி எறியத்தான் போறேன்!').

பெரும்பாலான படுக்கைக் கணினிப் பயனீட்டாளர்கள் பாது காப்பற்ற வயர்லெஸ் (Unsecured WiFi) மூலமாக ஆன்லைனில் இணைந்திருப்பது, வீட்டுக் கதவைப் பூட் டாமல் அதைப் பற்றி வாசலில் போர்டு தொங்கவிடுவதற்குச் சமம்.

இது மட்டுமல்ல... சொடுக்கியவுடன் பதில் கிடைக்கிறது என்பதால், மிகச் சாதாரண விவரங்களுக்கும் இணையத்தைச் சார்ந்திருப்பது ஒரு விதத்தில் காமெடி; ஒரு விதத்தில் கவலை. உதாரணமாக, www.weather.com போன்ற வலைத்தளங்களில் உங்கள் ஊர் அல்லது ஏரியாவின் பெயரைக் கொடுத்தால் 'இப்போது மழை பெய்கிறதா?' என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதற்குப் பதில் ஜன்னலைத் திறந்து பார்ப்பது பெட்டர்!

ஓ.கே.. சென்ற வாரத்தில் தொடங்கிய CrowdSourcing டாப்பிக் பக்கம் திரும்புவோம். அவுட்சோர்ஸிங்கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இந்தியாவுக்கு டாலர்களைக் கொட் டிய கற்பக விருட்சம். ஒரு நிறுவனம் தனது டிபார்ட்மென்ட் ஒன்றின் வேலையை மற்றொரு நிறுவனத் திடம் கொடுத்துவிட்டுத் தனது ஆதார பிசினஸ் ஏரியாவில் கவனம் செலுத்த அவுட் சோர்ஸிசிங் மிகவும் உதவி யது. ஆட்களை வேலைக்குக் கண்டுபிடிப்பது, அவர்க ளுக்குப் பயிற்சியளிப்பது, வேலை குறைந்துவிட்டால் வீட்டுக்கு அனுப்புவது போன்ற அனைத்தும் அவுட்சோர்ஸிங் கம்பெனியின் பொறுப்பு என்பதால், வேலை கொடுத்த நிறுவனத்துக்குத் தலைவலி குறைவு. அதோடு, கடல் கடந்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்கு அவுட்சோர்ஸிங் ஆர்டர்களைக் கொடுத்துவிட்டால், மொத்தச் செலவும் குறையும் என்பதால், அவுட்சோர்ஸிங் கொடிகட்டி, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகமானது.

அவுட்சோர்ஸிங் அடைந்த மாபெரும் வெற்றிக்கு அடிப்படைக் காரணி இணையம். அது மட்டும் இல்லாதிருந்தால், கால் சென்டரில் வேலை பார்க்கும் நம்மூர் சண்முகநாதன் ஷான் என்றும், பாக்கியசாமி பீட்டர் என்றும் பெயர் சூட்டிக் கொண்டு, அமெரிக்க உச்சரிப்பில் அவுட்சோர்ஸிங் ஊழியர்களாகச் சேவை செய்திருக்க முடியாது.

ஆனால், இணையத்தின் வலிமை இதையெல்லாம்விட மிகப் பெரியது. மக்களை இணைக்கும் பணியை இணையம் படுநேர்த்தியாகச் செய்ய முடியும் என்பதால், ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடம் வேலையை அவுட்சோர்ஸிங் செய்வதற்குப் பதிலாக, உலகளாவிய வலையில் (World Wide Web) இணைந்திருக்கும் லட்சக்கணக்கோருக்கு நேரடியாகவே அவுட்சோர்ஸிங் செய்யலாமே என்ற சிந்தனையின் செயாலாக்கம்தான் CrowdSourcing.

ஒரு நிறுவனம்தான் என்றில்லை... தனி மனிதனான நீங்களும் தேவையான வேலைகளை மற்றவர்களுக்கு அவுட்சோர்ஸிங் செய்யலாம். அதே வேளையில், நீங்கள் மற்றவர்களது வேலைகளையும் செய்துகொடுக்கலாம்.

சில CrowdSourcing ஐடியாக்களையும் நிறுவனங்களையும் அலசலாம்.

http://mygengo.com/ வலைத்தளம் மொழிபெயர்ப்புக்கானது. நீங்கள் மொழிபெயர்ப்பாளராக இருந்தால், உங்களது திறனைச் சோதித்த பின்னர், நீங்கள் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பாளராகப் பதிவு செய்துகொள்ளலாம். நீங்கள் ஆன் லைனில் இருக்கும்போது, மொழி பெயர்ப்பு தேவைப்படும் யாராவது தங்கள் தேவையை அப்லோட் செய்தால், அந்தப் பணி உங்களுக்குக் கொடுக்கப்படும். மொழிபெயர்த்துக் கொடுத்தால், வார்த்தைகளுக்குத் தக்க ஊதியம் உங்களது கணக்கில் உடனடியாகச் செலுத்தப்பட்டுவிடும். தமிழில் தளம் கட்டி, மொழிபெயர்க்கும் கூட்டத்தைத் திரட்ட தொழில்முனைவோர் யாராவது முனைவீர்களா?

www.guru.com வலைத்தளம் இன்டீரியர் டிசைனிங்கில் இருந்து, பிராட்காஸ்டிங் வரை சகல வகையான வேலைகளையும் அந்தந்த ஏரியாவில் திறமை உள்ளவர்கள் செய்துகொடுக்க உதவுகிறது.

www.odesk.com, www.elance.com போன்றவையும் இதே போலத்தான்.

அமேசான் டாட் காமின் சேவைகளில் ஒன்றான www.mturk.com ரொம்பவே சுவாரஸ்யமானது. இன்ட்ரெஸ்டிங்! மெக்கானிக்கல் டர்க் என்பதன் சுருக்கமாக mturk எனப் பெயரிடப்பட்ட இந்த வலைத்தளத்தில் யார் வேண்டுமானாலும் பணி கொடுப்பவராகவோ (Requester), பணி செய்பவராகவோ (Worker) பதிந்துகொள்ளலாம். பணிகளைக் கொடுப்பவர்கள் இணைய சேவைக் கூறுகளைப் (Web Services) பயன்படுத்தி நேரடியாக அப்லோட் செய்ய, பணி செய்பவர் அதனை உடனுக்குடன் முடித்துக் கொடுத்து ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். mturk.comல் செய்யப்படும் பணிகள் எவராலும் செய்யக்கூடிய, மிக எளிதான, ஆனால் கணினிகளால் செய்ய முடியாதவையாக இருக்கும். உதாரணமாக, வலைத்தளம் ஒன்றில் அதன் உறுப்பினர்களால் அப்லோட் செய்யப்படும் புகைப்படங்கள் பலான ரேஞ்சில் இருக்கக் கூடாது என்பதைக் கண்டறியும் கணினித் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. எனவே, அப்லோட் செய்யப்படும் படங்களை mturk.com-க்கு அனுப்பி, மனிதர்களை வைத்துத் தரம் பிரிக்கலாம்.

சீரியஸான பிசினசுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் பிரச்னை களுக்கு ஜாலியான தீர்வுகள் காணவும் CrowdSourcing-ஐ பயன்படுத்தலாம்.

நீங்கள் கூறிய ஒரு கருத்தையோ, செய்தியையோ, 'யார்கிட்டே போய்க் கேட்டாலும், நீ சொல்றதை தப்புன்னுதான் சொல்வாங்க!' என்கிறாரா உங்கள் நண்பர்?

www.sidetaker.com-க்குச் சென்று உங்கள் தரப்பு வாதத்தை எழுதி, உங்கள் நண்பரை அவர் தரப்பு விளக்கத்தை எழுதவைத்துக் காத்தி ருங்கள். இந்த உலகமே உங்கள் இருவரையும் ஆதரித்தும் எதிர்த்தும் sidetaker.com-ல் பதிவு செய்திருக்கும் பின்னூட்டங்களைப் படித்து ரசித்து சமரசம் ஆகிக்கொள்ளலாம்!

0 comments:

Post a Comment

Newer Posts Older Posts